வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்க நடைபாதை பணி துவக்கம் வாகன போக்குவரத்து மாற்றம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி நாற்கர சாலையில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நாற்கர சாலையில் பொதுமக்களும், வாகனங்களும் ஒரு பக்கம் இருந்து மற்றொரு பக்கம் கடந்து செல்லும் வகையில் மேம்பாலங்கள், சுரங்க நடைபாதைகள், சிறிய வாகனங்கள் கடந்து செல்வதற்கான மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நாற்கர சாலையில் காவேரிப்பாக்கம், கந்தனேரி, ஆம்பூர் உட்பட பல இடங்களில் சாலை மேம்பாலங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.

அதேபோல் வேலூர் சத்துவாச்சாரியில் பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கங்கையம்மன் கோயில் மற்றும் ஆடிஓ சாலை இடையே சுரங்க நடைபாதை ₹1.64 கோடி செலவில் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த சுரங்க நடைபாதை தேசிய நாற்கர சாலையில் சர்வீஸ் சாலையை தவிர்த்து 6 வழிச்சாலையின் நீளமான 25 மீட்டர் நீளத்துக்கு, சாலையின் கீழ் 5 மீட்டர் அகலத்தில் அமைகிறது. இச்சுரங்க நடைபாதையில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர் உடனுக்குடன் வெளியேறும் வகையில் தானியங்கி மோட்டார்களும் அமைக்கப்படுகின்றன.

சுரங்க நடைபாதை இருபகுதிகளாக பணி  நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பகுதி பணி வரும் திங்கட்கிழமை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் சென்னை வழித்தடத்தில் சென்டர் மீடியனில் இருந்து முதல் லேயரில் பணி தொடங்கப்படுகிறது. தொடர்ந்து நடுப்பகுதியிலும், அதன் பிறகு இறுதி பணி நடக்கும். இப்பணிகள் முடிந்ததும் பெங்களூரு வழித்தடத்தில் பணிகள் தொடங்கும். இதற்காக இன்று பாதசாரிகள், வாகனங்கள் கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  அதேபோல் வாகன போக்குவரத்தும் திருப்பிவிடப்படுகிறது. இதற்காக ரிப்ளக்டர்கள் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: