போதை பொருள் கடத்தல் வழக்கு பினீஷ் கோடியேரி வீட்டில் 25 மணி நேரம் சோதனை: குடும்பத்தினரை சிறை வைத்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்:   போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பினீஸ் கோடியேரியின் திருவனந்தபுரம்  வீட்டில் நேற்று அதிகாரிகள் தொடர்ந்து 25 மணி நேரம் சோதனை நடத்தினர். பெங்களூரு போதை பொருள் கடத்தல்  வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கோடியேரியை  அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு கேரளாவில் பல பகுதிகளில் சொத்துகள் இருப்பதும், பலருடன்  சேர்ந்து ஹோட்டல், கார் உதிரிபாகம் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களில்  ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறையினர் ஒரே நேரத்தில் திருவனந்தபுரத்தில் பினீஷ்  வீடு மற்றும் அவர் பங்குதாரராக உள்ள 5 நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று காலை 11 மணி வரை 25 மணி நேரம் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள்  கிடைத்ததாக கூறப்படுகிறது.  சோதனையின்போது, பெங்களூருவில் போதை  பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட அனூப் முகம்மது பயன்படுத்திய கிரடிட்  கார்டு உள்பட மேலும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்க அதிகாரிகளை தடுத்த கேரள போலீஸ்

பினீஷ் கோடியேரி வீட்டில் விசாரணை முடித்து வெளியே வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனத்தை போலீசார் தடுத்தனர். நடந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று போலீசார் அவர்களிடம் கூறினர். ஆனால், விளக்கம் அளிக்க முடியாது என கூறிவிட்டு,  அமலாக்கத் துறையினர் அங்கிருந்து சென்றனர்.

கையெழுத்து போட மறுத்த மனைவி

சோதனை  முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பினீசின்  மனைவியிடம் அமலாக்க அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். கையெழுத்திடவில்லை  என்றால் நாங்கள் வெளியே செல்ல மாட்டோம் எனகூறிய அதிகாரிகள் அங்கேயே இருந்தனர். பினீசின் மனைவி, குழந்தை மற்றும் தாயையும் அவர்கள் வெளியே  விடவில்லை. நேற்று காலை வந்த உறவினர்கள், பினீஷ் கோடியேரியின் மனைவியை  சந்திக்க வேண்டும் என்றனர். ஆனால், பாதுகாப்பில் இருந்த மத்திய போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து  பெண்கள்  உள்பட உறவினர்கள் வீட்டின் கேட் முன் போராட்டம்  நடத்தினர்.

அரசியல் பழிவாங்கல்

கேரள மார்க்சிஸ்ட் நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பினராய் விஜயன், மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அரசியல் ரீதியாக மார்க்சிஸ்ட் கட்சியை பழிவாங்கும் விதத்தில் அமலாக்கத்துறையினர் செயல்படுகின்றனர். ஆனாலும், விசாரணைக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: