அமெரிக்கர்கள் சாதனை 100 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்முறை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டு மற்றும் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 10 கோடி பேர் வாக்களித்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த நேரடி வாக்குப்பதிவில் மேலும் 6 கோடி பேர் வாக்களித்தனர். இதன் மூலம் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 23 கோடி வாக்காளர்களில் 16 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்கு சதவீதம் 67 ஆகும். இது நூற்றாண்டில் இதுவரை பதிவாகாத வாக்கு சதவீதமாகும். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் அமெரிக்க மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி, நூற்றாண்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன், 1900 ம் ஆண்டில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன்பிறகு தற்போதுதான் அதிகபட்சமாக சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2016ல் 59.2 சதவீத வாக்குகள் பதிவானது. 1968ம் ஆண்டுக்குப் பிறகு வாக்கு சதவீதம் 60% தாண்டுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

* நம்பிக்கையுடன் இருங்கள் நாமே வெற்றி பெறுவோம்: பிடென் பேச்சு

‘‘அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள். நாமே வெற்றி பெறுவோம்’’ என தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிடென் பேசினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் தனது சொந்த ஊரான தில்வரேவில் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘‘இன்னும் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதை நாம் அறிவோம். நம்பிக்கையுடன் இருங்கள். நாம் தான் ஜெயிக்கப் போகிறோம்’’ என்றார். அவரது பேட்டியைத் தொடர்ந்து, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இன்றிரவு நான் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன். நாங்கள் பெரிதாக வளர்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். அவர்களை விடக்கூடாது. ஓட்டுப்பதிவு முடிந்தபிறகும் வாக்களிக்க கூடாது’’ என்றார்.

* இந்தியர்கள் வெற்றி, தோல்வி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட பல இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டு உள்ளனர். அவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். சிலரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

ராஜா கிருஷ்ணமூர்த்தி: ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் தொகுதியில் இருந்து 3வது முறையாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். . டெல்லியில் பிறந்த இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். முதல் முறையாக, கடந்த 2016ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானார்.

அமரிஷ் பாபுலால்: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்செல்சில் பிறந்து வளர்ந்த இவர், இங்கிருந்து ஏற்கனவே 4 முறை ஜனநாயக கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். இம்முறை இவர் பெறும் வெற்றி 5வது தொடர் வெற்றியாகும்.

ரோகித் கண்ணா: பென்சில்வேனியாவில் பிறந்த இவர் கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஏற்கனவே இரண்டு முறை ஜனநாயக கட்சியின் சார்பாக தேர்வாகி உள்ளார். தற்போது வெற்றி பெற்றால், அது இவரது 3வது தொடர் வெற்றியாகும்.

பிரமிளா ஜெயப்பால்: இவர் சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார். இம்முறை குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட கிரெய்க் கெல்லரை எதிர்த்து வெற்றி பெற்றார். இதன் மூலம், இவருடைய 3வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஹிரால் திபிர்னெனி: மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர் ஹிரால் திபிர்னெனி, ஜனநாயக கட்சியின் சார்பாக அரிசோனாவில் போட்டியிட்டார். அங்கு இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் தற்போதைய எம்பி. டேவிட் ஸ்வெய்கர்ட்டை தோற்கடித்து 3வது முறையாக வெற்றி பெற்றார்.

ஸ்ரீ பிரஸ்டென் குல்கர்னி: ஜனநாயக கட்சி சார்பில் டெக்சாசில் போட்டியிட்ட இவர் குடியரசு கட்சி வேட்பாளர் டிராய் நெல்சை எதிர்த்து நிறுத்தப்பட்டார். இவருக்கு 44 சதவீதம், அதாவது 1,75,738 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

Related Stories: