தாழம்பேடு வளைவு பகுதியில் சாலையில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - தாம்பரம் சாலை, தாழம்பேடு வளைவு பகுதியில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். வாலாஜாபாத் - தாம்பரம் வரை செல்லும் சாலையை ஒட்டி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் வாலாஜாபாத், ஒரகடம், தாம்பரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள். இதனால் பலர், இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரும்புகின்றனர். இந்நிலையில், வாரணவாசி அடுத்த தாழம்பேடு சாலை வளைவில் லாரிகளில் ஏற்றி செல்லப்படும் ஜல்லிக்கற்கள், மணல் சிதறி கிடக்கிறது.

இதனால் அவ்வழியாக பைக்கில் செல்வோர், இரவு நேரங்களில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஜல்லிக்கற்களால் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் மண் சரிவில் விழுபவர்கள், பின்னால் வரும் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சிக்கி படுகாயமடைவதுடன், சில இறப்பு சம்பவங்களும் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதையொட்டி, இரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், மரண பீதியில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்தும் இதுவரை மண் குவியல்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வளைவு பகுதியில் உள்ள மண் குவியல்களை அகற்றி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: