ஆண்டிபட்டி அருகே 12 அடி குழியில் இறங்கி ஜீவ சமாதி அடைய முயன்ற அகோரி சாமியார்: போலீசார் தடுத்து நிறுத்தினர்

ஆண்டிபட்டி:  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - ஜெயலட்சுமி. இவர்களது 3வது மகன் அசோக் (எ) சொக்கநாதர் (39). இவர் 13 வயதில் காணாமல் போய், 26 வருடங்கள் கழித்து கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு திரும்பினார். காசிக்கு சென்று, அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக தெரிவித்துள்ளார்.  நேற்று முன்தினம் இரவு இவர், தோட்டத்தில் 12 அடி ஆழ குழி தோண்டி, சிமென்ட் ஸ்லாப் கற்கள் பதித்து உள்ளே இறங்கி ஜீவ சமாதி அடையப்போவதாக கூறி அகோரி கோலத்தில் அமர்ந்தார். அருகில் சிவன் படம், ருத்ராட்ச மாலை, பூக்கள் கிடந்தன. தகவலறிந்து வந்த  ராஜதானி போலீசார் அவரை ேமலே வருமாறு கூறினர்.

அதற்கு அவர், ‘நாட்டில் பல்வேறு கொடிய  நோய்களுக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்படுகின்றனர். சிவன் உத்தரவிட்டதால் பூமிக்கு அடியில் 9 நாள் தவம் இருக்க போகிறேன். தீபாவளிக்கு முதல் நாள் நான் வெளியே வருவேன். சிகரெட் மட்டுமே புகைத்து வாழ்கிறேன். 24 வருடங்களுக்கு முன்பே இறந்து பல பிறவிகள் எடுத்து வந்து கொண்டிருக்கிறேன். இப்போது பாம்பு ரூபத்தில் உள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள். என்னை தவம் இருக்க விடுங்கள்’’ என்றார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதியில்லை என்றனர். 2 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் அகோரி மேலே வந்தார். அதன்பின் குழியை மூடினர்.

Related Stories: