சோளப்பயிர்களை நாசம் செய்வதால் அதிர்ச்சி: வடமாநில வெட்டுக்கிளிகள் திண்டுக்கல் படையெடுப்பு? வேளாண்துறையினர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல்  அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை கடந்த சில நாட்களாக பச்சை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், சோளப்பயிர்களின் தண்டுப்பகுதியை மட்டும் விட்டு விட்டு தோகை அனைத்தையும் முழுமையாக தின்றுவிடுகின்றன. இதனால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இவை வடமாநிலங்களில் இருந்து படையெடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள், ‘வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை அதிகாரி உமா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முள்ளிப்பாடி கிராமத்திற்கு சென்று வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர். இதுகுறித்து காந்தி கிராமிய பல்கலைக்கழக பூச்சியியல் துறை வல்லுநர்  ஷகில் தாஜ் கூறுகையில், ‘‘இவை பாலைவன வெட்டுக்கிளி கிடையாது. அந்த வகை வெட்டுக்கிளிகள் செடிகள் முழுவதையும் அழித்துவிடும். இவை  சாதாரண வெட்டுக்கிளிகள் தான்’’ என்றார்.  

Related Stories: