வக்பு வாரியத்தை கலைத்தது செல்லாது: தமிழக அரசின் அப்பீல் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்ைத கலைத்தது சட்டவிரோதம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு  மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 2017ல்  தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினர்கள் ஆனார்கள். மேலும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த  வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வாரியத்தை 2019 செப்டம்பர் 18ல் தமிழக அரசு கலைத்து, நிதித்துறை செலவின செயலர்  சித்திக்கை வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான்  வழக்கு  தொடர்ந்து இருந்தார்.

முத்தவல்லிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சையது அலி அக்பர், ஹாஜா கே.மஜித் ஆகியோரும் வழக்கில் இணைந்தனர். மனுக்களை  விசாரித்த நீதிமன்றம், வக்பு வாரியத்தை கலைத்தது சட்ட விரோதம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 15ம் தேதி  ஒத்திவைத்தது. இந்நிலையில், நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘வக்பு  வாரியம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம்  வழங்கிய உத்தரவிற்கும் தடை விதிக்க முடியாது. அதேபோல்், வாரியம் செயல்படும் வரை முத்தவல்லிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட இருவரும்  செயல்படவும் தடையில்லை,’ என உத்தரவிட்டனர்.

Related Stories: