மாமல்லபுரத்தில் சிற்பங்களை திறக்க வலியுறுத்தி மதிமுக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்களை பொதுமக்கள், சுற்றுலா பார்வையாளர்களுக்கு திறந்து விட வலியுறுத்தி மதிமுக சார்பில்  கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை  மத்திய, மாநில அரசுகள் உடனடியாக திறக்க வேண்டும் என மதிமுக சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்பாட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம்  அருகே நேற்று நடந்தது. மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். ராமலிங்கம், பரமசிவம் தேசிங்கு,  சசிகலா லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே திறக்க வேண்டும்  என அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். தொடர்ந்து மல்லை சத்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது, திரையரங்குகள் மற்றும் பொது  போக்குவரத்துக்கு அனுமதித்த மாநில அரசு, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலாப் பயணிகளின் நலன்  கருதி திறக்க வேண்டும். வட இந்தியாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த பாரம்பரிய சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி  வழங்கியதுபோல், இங்கேயும் அனுமதிக்க வேண்டும்.

ஒரு சில நாட்களில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளியில் 5 மணிநேரம் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.  அதாவது, காலை 3 மணிநேரம், மாலை 2 மணிநேரம் என மாணவர்கள் ஒரே வகுப்பறையில் இருக்கும்போது, அவர்களுக்கு கொரோனா தொற்று  வேகமாக பரவும். மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதால், கொரோனா தொற்று ஏற்படாது. மத்திய தொல்லியல் துறை அந்தந்த  மாநிலங்களில் உள்ள சிற்பங்களை திறக்க அனுமதி வழங்கிய பிறகும், தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே, தமிழக அரசு மாமல்லபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காலம் நீட்டிப்பு செய்யாமல், தொல்லியல் துறை  கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிற்பங்களையும் உடனே திறக்க வேண்டும் என்றார். திருப்போரூர் மதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு,  ஊனை பார்த்திபன், காஞ்சி வளையாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: