திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: ரூ30 லட்சம் பொருட்கள், எரிசாராயம் பறிமுதல்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள தேங்காய்பாக்கம் கிராம வயல்வெளி பகுதியில் தனியாக உள்ள வீட்டில் போலி மதுபானஆலை செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணியிடம் விசாரணை நடத்தினார். இதில் வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த எஸ்பி அந்த அறையின் சாவியை கேட்டார். ஆனால் சாவி இல்லை என்று அந்தப்பெண் தெரிவித்ததால் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.  

உள்ளே சென்று பார்த்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 507 கேன்களில் எரிசாராயம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சோதனை செய்ததில் அந்த அறைகளில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் எரிசாராயம், 20 அட்டைப் பெட்டி உள்ளிட்டவைகளில் 1080 பாட்டில்களில் போலி மது பானங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஓங்கூர் களத்துமேட்டு தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் முரளி (32), ஒலக்கூர் எஸ். கடூர் ஹாஸ்பிடல் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகன் துரை (33), ஒலக்கூர் மேல்பாதி மேற்குதெருவை சேர்ந்த கோதண்டம் மகன் ராமு (42) ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வயல்வெளிப் பகுதியில் சென்னையில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் ஒலக்கூரை சேர்ந்த ராமு என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் இருக்குமென போலீசார் தெரிவித்தனர். போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு எரிசாராயம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: