கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95 வயதுக்கு மேற்பட்ட 15 பேர் குணமடைந்தனர்: ஓமந்தூரார் மருத்துவமனை டீன் தகவல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 வயதுக்கு மேற்பட்ட 15 பேர் பூரண குணமடைந்துள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தற்போது 23 ஆயிரத்து 37 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 21 ஆயிரத்து 329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் 95 வயதுக்கு மேற்பட்ட 15 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:  ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில்  இதுவரை 90 வயதுக்கு மேற்பட்ட 31 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 27 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 95 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 பேர். இவர்களில் 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நுரையீரல் பாதிப்பு அடைந்தவர்களும், பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த பட்டியலில் நேற்று 96 வயது மூதாட்டி ஒருவரும் குணமடைந்துள்ளார். சென்னையை சேர்ந்த அந்த மூதாட்டி கடந்த 10 நாளுக்கு முன்னர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முற்றிலுமாக குணமடைந்து  வீடு திரும்பியுள்ளார். இந்த மருத்துவமனையில் குறைந்தபட்சம் 17 வயது (70% நுரையீரல் பாதிப்பு) முதல் அதிகபட்சமாக 98 வயது வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பின் நல்வாழ்வு மையத்தில் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: