கே-போன், ஸ்மார்ட் சிட்டி உள்பட கேரள அரசு திட்டங்களில் சிவசங்கருக்கு கமிஷன்? ஆவணங்களை பரிசோதிக்க அமலாக்கத்துறை முடிவு

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை மத்திய அமலாக்கத்துறை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில், சிவசங்கர் பினாமி பெயரில் கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் சொத்துக்கள் வாங்கியுள்ளது தெரியவந்தது. மேலும் கேரள அரசின் பல்வேறு திட்டங்களில் சிவசங்கர் கமிஷன் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சமீபத்தில் கேரள அரசு அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் இன்டெர்நெட் வசதி வழங்கும் கே-போன் திட்டம், கொச்சி ஸ்மார்ட் சிட்டி, திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் டோரஸ் டவுண் டவுன் திட்டம், இ-மொபைலிட்டி ஆகிய திட்டங்களை அறிவித்தது.

இவை அனைத்தும் சிவசங்கரின் ஆலோசனைப்படியே கொண்டு வரப்பட்டன. இந்த 4 திட்டங்களும் சிவசங்கரின் நேரடி கண்காணிப்பில் நடந்து வந்தன. இவற்றுக்காக பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலங்களும் வாங்கப்பட்டன. எனவே ரியல் எஸ்டேட் மாபியா மூலம் கருப்புப்பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என மத்திய அமலாக்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்த ஆவணங்களை பரிசோதிக்க அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. இதற்கிடையே லைப் மிஷன் திட்ட ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவசங்கரை ஐந்தாவது குற்றவாளியாக சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* பினராய் குற்றச்சாட்டு

கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டி: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளா தான் மத்திய அரசிடம் கேட்டது. இதன்படி மத்திய விசாரணை குழுக்கள் விசாரணை நடத்தின. முதலில் விசாரணை முறையாக நடந்தது. ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. லைப் மிஷன், கே போன் உட்பட திட்டங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர். இதன்மூலம் கேரள அரசின் திட்டங்களை சீர்குலைக்கும் வகையில் மத்திய விசாரணை குழுக்கள் எல்லை மீறி செயல்படுகின்றன. பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. இந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தத்தான் மத்திய விசாரணை குழுக்கள் செயல்படுகின்றனவோ என்று சந்தேகம் எழுந்துள்ளது’’ என்றார்.

Related Stories: