பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஐஏஎஸ் கனவுடன் வேலையை துறந்த இளம்பெண்: கோரக்பூரில் பிச்சை எடுக்கும் பரிதாபம்

கோரக்பூர்: தெலங்கானாவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண் ஐஏஎஸ் கனவுடன் பதவியை துறந்தார். ஆனால், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டு கோரக்பூரில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த ரஜினி என்ற இளம்பெண், கடந்த ஜூலை 23ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அடுத்த திவாரிப்பூர் காவல் நிலையம் அருகே மிக மோசமான நிலையில் சுற்றித்திரிந்தார். அவரது பையில் எட்டு ‘செட்’ துணிகள் இருந்தன. அந்த பெண் குப்பை தொட்டியில் வீசப்பட்ட அரிசி உணவை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த ெபண்ணை கண்ட போலீசார், அவரை மீட்டு விசாரித்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரிக்கும் போது, அவர் சரளமாக ஆங்கிலத்தில் பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்ற இலக்கோடு போராடும் சிலர், சில நேரங்களில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வாரங்கலை சேர்ந்த இந்த இளம்பெண் முதலில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

அதற்காக, ஏற்கனவே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியாற்றி வந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். பின்னர்,  பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, ஐஏஎஸ் தேர்வை தொடர்ந்து எழுதியுள்ளார். ஆனால், அவரால் தேர்ச்சி அடைய முடியவில்லை. ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளானார். இப்போது அவருக்கு மூளை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. தெருக்களில் குப்பைகளை அள்ளும் நபராக ஆகிவிட்டார். சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு  வெளியேறிய இவர், பிறரிடம் கேட்டு வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ​​சுமார் 1,500 கிலோமீட்டர் கடந்துவந்து கோரக்பூரில் சுற்றித் திரிகிறார். அவரை, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: