கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் அடக்கம்: 63 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடந்தது

தஞ்சை: கொரோனா தொற்று காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு (72), நேற்றுமுன்தினம் இரவு 11.15 மணி அளவில் உயிரிழந்தார். நேற்று காலை அங்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர்கள், துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி கிராமத்துக்கு மதியம் 1 மணிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோயில் திடலில் அவரது உடலை சுகாதார துறையினர் இறக்கி வைத்து, தேசிய கொடியை போர்த்தினர். அங்கு வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, காமராஜ், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திரபாலாஜி, எம்பி ஆர்.வைத்திலிங்கம், துணைஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தேனி எம்பி ரவீந்திரநாத் குமார், மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

திமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன், பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து வன்னியடி சாலை மணல்மேட்டில் உள்ள அவருக்கு சொந்தமான தோப்பில், கொரோனா விதிமுறைப்படி, அரசு மரியாதையுடன் 63 குண்டுகள் முழங்க துரைக்கண்ணு உடல் நேற்று மாலை 5.10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. அரைக்கம்பத்தில் தேசிய கொடி: அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து துறை அரசு அலுவலக கட்டிடங்களிலும் தேசியக்கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

Related Stories: