கரூரில் பிளக்ஸ் பேனர் அகற்றியதில் மோதல் அதிமுகவினர் தாக்குதலில் திமுக தொண்டர் சாவு

கரூர்: பிளக்ஸ் பேனர் அகற்றியதில் ஏற்பட்ட மோதலில் அதிமுகவினர் தாக்கியதில் திமுக தொண்டர் பலியானார். கரூர் மாவடியான் கோயில் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு கட்டப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படும் போது, திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அதே பகுதி திமுகவை சேர்ந்த பிரபாகரன்(55), இவரது மகன் விக்னேஷ்(28) ஆகிய இருவரும் காயமடைந்தனர். வீட்டுக்கு சென்ற பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரபாகரனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் திமுகவினர் மற்றும் பிரபாகரனின் உறவினர்கள் 200பேர், காந்திகிராமம் பகுதியில் கரூர்- திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி பகலவன் வந்தார். அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரும் குவிக்கப்பட்டனர். மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் வந்தார். எஸ்பி மற்றும் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியை மாற்ற வேண்டும். மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: