சேலம் சரக பத்திரப்பதிவுத்துறை டிஐஜி வீட்டில் அதிரடி ரெய்டு: ஒரே நாள் மாமூல் 34 பவுன், ரூ.3.2லட்சம் பறிமுதல்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பத்திர பதிவுத்துறை டிஐஜி அலுவலகம் உள்ளது. இங்கு டிஐஜியாக பணியாற்றிய ஆனந்த் (46), கடந்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் சேலம் பேர்லாண்ட்ஸ் பிருந்தாவன் ரோட்டில் உள்ள கைலாசா நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்கு அக்டோபர் மாத மாமூல் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய புகார் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரது வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

நள்ளிரவு வரை ஏராளமானோர் வந்து மாமூல் கொடுத்துவிட்டு சென்றனர். விடிய, விடிய முகாமிட்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை 6 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான கவர்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, கத்தை கத்தையாக பணம் இருந்தது. இவ்வாறு மொத்தம் ரூ.3.20 லட்சம் ரொக்கப்பணம், 34 தங்க காசுகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு பவுனாகும். இவை அனைத்தும் ஒரே நாளில் ஆனந்த் வாங்கிய மாமூலாகும். இவை நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பெற்ற மாமூல் தான். மேலும் 5க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இதில் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.25 லட்சம் என பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், ஏராளமான நிலம் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. குடும்பத்தினர் சென்னை அயனாவரத்தில் வசித்து வருகின்றனர். இந்த சோதனையின் போது வீட்டில் ஏராளமான பணம், தங்க நகைகள் இருந்தது. இதனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுக்கவில்லை. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை, இரவு 7 மணி வரை நடந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: