ரேஸ்கோர்ஸ் ஹவுசிங்யூனிட் குடிநீரில் தவளை குட்டிகள்: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ஹவுசிங்யூனிட் பகுதியில் விநியோகம் செய்த குடிநீரில் தவளை குட்டிகள் இருந்ததால் அரசு ஊழியர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட கலெக்டர் வீட்டின் பின்புறம் உள்ள வருவாய்துறை அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் 200-க்கும்  மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்த குடியிருப்புகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு குடிநீர் தரையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத டேங்கில் நிரப்பப்படும். பின்னர், மோட்டர் மூலம்  சம்மந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட டேங்குகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த  தண்ணீரில் சேறு கலந்து காணப்பட்டது. மேலும், ஏராளமான தவளை குட்டிகளும் தண்ணீருடன் வந்தது.

இதனால், தண்ணீரை பிடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியிருப்பின் தரைத்தளம் மற்றும் மேலே உள்ள குடிநீர் டேங்குகளை சுத்தம் செய்து பல  மாதங்களாகிறது. இதனால், தான் தண்ணீரில் தவளை குட்டிகள் உள்ளிட்ட பூச்சிகள் வந்துள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இது போன்ற தண்ணீரை குடித்தால் பல்வேறு தொற்று வியாதிகள் வரும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் உடனடியாக டேங்கை சுத்தம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: