கூடலூர் அருகே வீட்டை உடைத்த காட்டு யானைகள்: தப்பி ஓடிய குடும்பத்தினர்

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கோழிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது  மனைவியுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இவரது வீட்டை ஒட்டி வந்த 7 யானைகள் கொண்ட கூட்டம்  வீட்டின் ஒரு பக்க சுவரை தந்தத்தால் குத்தி உடைத்து உள்ளது. யானைகள் வீட்டை உடைப்பதை அறிந்த இருவரும் பின்புற வாசல் வழியாக தப்பி  ஓடி அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மற்றும் அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர்.  ஆனால், பல மணி நேரம் கழித்தே யானைகள் அங்கிருந்து சென்றன. யானைகள் சுவற்றை இடித்து தள்ளியதால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

அப்பகுதி மக்கள் கூறுகையில்,`இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் பகல் நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிகளில் ஓய்வெடுக்கின்றன.  கோழிகொல்லி, கத்தரிதோடு, புளியம்பாறை மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் காரணமாக மக்கள்  அச்சத்துடனேயே வீடுகளில் இருக்க வேண்டி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் மூன்று வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. கூட்டமாக வரும்  யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும் அவை வனப்பகுதிக்குள் செல்வது இல்லை. மாலை ஆனதும் அவை கிராமப்பகுதிகளுக்குள் வந்து  விடுகின்றன. காட்டு யானைகள் இடிக்கும் வீடுகளை மீண்டும் சீரமைக்க உரிய நிவாரணமும் கிடைப்பதில்லை. எனவே, யானைகள் வனப் பகுதிகளில்  இருந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: