கட்டிடம் கட்ட 9 ஆண்டுகள் தாமதம் அதிகாரிகள் போட்டோவை சுவற்றில் தொங்க விடுங்கள்: மத்திய அமைச்சர் கட்கரி காட்டம்

* கடந்த 2008-2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

* 2014ம் ஆண்டில் இருந்து பாஜ ஆட்சியில் இருந்து வருகிறது.

புதுடெல்லி:  ‘கடந்த 2008ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட திட்டத்தின் கீழ்  9 ஆண்டுகளாக கட்டிடத்தை கட்டாமல் தாமதப்படுத்திய அதிகாரிகளின் புகைப்படத்தை  கட்டிடத்தின் சுவற்றில் தொங்க விடுங்கள்,’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  கூறியுள்ளார். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த  ஞாயிறன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தை வீடியோ  கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.  அதில், அவர் பேசியதாவது: இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு 12 ஆண்டுகள் ஆனது  எப்படி? 2008ம் ஆண்டு 250 கோடியில் திட்டம் இறுதி செய்யப்பட்டது. 2011ம்  ஆண்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அந்த கட்டிடத்தை கட்டுவதற்கு 9  ஆண்டுகள்  ஆகியுள்ளது. இது அவமானப்படக் கூடிய ஒன்றாகும். கட்டிடம் கட்டுமானத்தில்  இருந்தபோது 2 அரசுகள், 8 தலைவர்கள் இந்த அமைப்பை கடந்து சென்றுள்ளனர்.

 

தற்போது  உள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் இந்த தாமதத்தில் தொடர்பு இல்லாதவர்கள். கடந்த  2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக ‘சிறப்பாக பணியாற்றியவர்’களின்  புகைப்படம் இருந்தால், இந்த  கட்டிடத்தில் தொங்க விடுங்கள். ஏனென்றால், அவர்கள்தான் இந்த பணியை தாமதப்படுத்தி உள்ளனர். டெல்லி - மும்பை அதிவேக நெடுஞ்சாலை 2 -3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது என்று பெருமையுடன்  கூறுகிறோம். இதன் மதிப்பு ₹80  ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரையாகும். ஆனால், 250 கோடி திட்டத்தை முடிப்பதற்கு இத்தனை ஆண்டுகள்  ஆகியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: