காட்பாடி டெல் வளாகத்தில் பெல் நிறுவன உற்பத்தி துவங்குவது எப்போது?... வேலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

வேலூர்: காட்பாடியில் இயங்கி வந்த தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் கடந்த ஆண்டு நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்டது. அதற்கு முன்னதாகவே படிப்படியாக தொழிலாளர்கள் விஆர்எஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் டெல் நிறுவனத்தை மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பெங்களூரு பாரத் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் ஏற்று நடத்த முன்வந்தது. இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பெல் நிறுவன அதிகாரிகள் பல முறை டெல் தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்டனர்.

இதில் மிகப்பழமையான தளவாடங்களை தவிர்த்து நல்ல முறையில் இயங்கும் இயந்திரங்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்து அதன் அறிக்கை டெல் நிர்வாகம் மூலம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து டெல் நிறுவனத்தை குத்தகைக்கு ஏற்று நடத்துவதற்கான முறையான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதற்காக பெல் தரப்பில் இருந்தும், டெல் தரப்பில் இருந்தும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் குத்தகை தொடர்பாக பேச்சு நடத்தி இறுதி முடிவை எட்டின.

இம்முடிவு டெல் நிர்வாக இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், இதுபற்றி பெல் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்படும். இதை தொடர்ந்து பெல் நிர்வாகக்குழு ஒப்புதல் கிடைத்ததும், டெல் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் அந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்றும், இதில் உள்ளூரை சேர்ந்த 350 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் டெல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டெல் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) காமராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தமிழக அரசின் ஒப்புதலுக்கு நிர்வாகக்குழுவின் முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தடுத்த பணிகள் நடைபெறும். அனேகமாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் உற்பத்தி தொடங்கும். பழமையான இயந்திர தளவாடங்கள் படிப்படியாக இ-டெண்டர் மூலம் விற்கப்படும். விஆர்எஸ் பெற்றுச்சென்ற தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வழங்கியிருக்கிறார்கள். அது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினார்.

Related Stories:

>