இண்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புக்காக அல்லாடும் பாலமலை கிராம மாணவர்கள்: சிக்னலுக்காக மலை உச்சிக்கு செல்லும் அவலம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாலமலை ஊராட்சி, சுமார் 4,000 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மலைவாழ் மக்கள் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பும், விவசாயமும் இவர்களின் பிரதான தொழிலாகும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டியோ, மிதிவண்டியோ கண்டிராத இந்த கிராமமங்களில், தற்போது இருசக்கர வாகனங்களும், சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. காரணம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராமமக்கள் கடுமை உழைப்பால் பல்வேறு தடைகளை தாண்டி, மண்சாலை அமைத்துகொண்டனர்.

இந்த சாலை மழைக்காலங்களில் மண்அரிப்பு காரணமாக, பெரும் சேதம் அடைந்து விடுகின்றன. இந்த அபாயகரமான சாலைகளில் சாகசம் செய்து மக்கள் பயணித்து நகரங்களுக்கு சென்று, தங்களது மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஒரு அஞ்சல் அலுவலகம், துணை சுகாதார நிலையம் உள்ள இந்த ஊராட்சியில் ஐந்து தொடக்கப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரு உயர்நிலைப்பள்ளி என ஏழு அரசு பள்ளிகள் உள்ளன.

இவற்றில் 500 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர் மலை அடிவாரத்தில் உள்ள நகரங்களில் அமைந்துள்ள, பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் பயின்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத இந்த மலை கிராமங்களில், சாதாரண நாட்களிலேயே ஆசிரியர்கள் தாமதமாக வருவது மழை காலங்களில் சாலையை காரணம் காட்டி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பல நாட்கள் கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்வதாக போக்கு காட்டுவார்கள். இதனால் இந்த மாணவ, மாணவியரின் கல்வித்தரம் கடும் பாதிப்புக்குள்ளானது. தற்போது கொரோனா காலம் என்பதால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்த மலை கிராமத்து வாசிகள், தங்களின் பிள்ளைகளும் படித்து பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கணவோடு, ஆட்டை விற்று, மாட்டை விற்று ஆன்ராய்டு செல்பேசி அதிகவிலைக்கு வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் இணைய வசதி இல்லாததால், மலை கிராமத்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை காணமுடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மலை கிராமங்களில், இணைய வசதி இல்லாத காரணத்தால், சுமார் ஒரு கி.மீ அல்லது 2கி.மீ தொலைவு, செங்குத்தான மலைபகுதியில் ஏறிச்சென்று மலை உச்சியை அடைந்தால் மட்டுமே, இணைய வசதி கிடைக்கிறது.

மலை உச்சியை அடைய ஏராளமான தடைகள் இருப்பதோடு, வனவிலங்குகள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. காற்று மழையடித்தால் ஒதுங்ககூட இடம் இல்லாதல், மேகமூட்டம் காணப்பட்டால் இம்மாணவர்கள் மலை ஏறுவதில்லை. இதனால் நடப்பு கல்வியாண்டில், பாலமலை மாணவ, மாணவியரின் கல்வி கானல் நீராகி போனது. ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தேசித்த கல்வித்துறை, இதுபோன்ற மலை கிராமங்களுக்கு, இணையவசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பாலமலை மாணவ, மாணவியரின் கோரிக்கையாக உள்ளது. தற்போது சேதம் அடைந்துள்ள மண்சாலையை, தார்சாலையாக மாற்றித்தந்தால் நாள்தோறும் நகர்புறங்களுக்கு வந்து, இணையவசதி உள்ள இடங்களிலிருந்து வகுப்புகளை கவனிக்க முடியும் என்று, மலைவாழ் மாணவர்கள் கூறுகின்றனர். தேர்தல் நேரங்களில் தார்சாலை போடுகிறோம், பஸ் விடுகிறோம் என கூறி வரும் வேட்பாளர்கள், அதன்பிறகு தங்களை திரும்பி பார்ப்பதில்லை என்பதே இப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

லட்சியத்தை எழுதி வைத்துள்ள மாணவி

மாணவி ஜெயந்தி, தன்னுடைய லட்சியங்களை, ஒரு பலகையில் எழுதி வைத்துள்ளார். அதில், நான் 11வது மற்றும் 12ம் வகுப்பில் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற விரும்புகிறேன். நான் ஐஏஎஸ் ஆக விரும்புகிறேன், நான் தகுதியின் அடிப்படையில் படிக்க விரும்புகிறேன், என்னுடைய இறுதிக்கணம் வரை, என்னுடைய பெற்றோருக்கு சேவை செய்வேன் என்ற வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.

Related Stories: