எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை: இயக்குனர் விஜயா பேட்டி

சென்னை: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை 1,075 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக தினசரி ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இங்கு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறியதாவது: எழும்பூர் மருத்துவமனையில் தினமும் 50 பிரசவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (27.10.2020) நள்ளிரவு 12மணி முதல் இன்று( 28.10.2020) நள்ளிரவு 12மணி வரை 24 மணி நேரத்தில் 64 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடத்தி சாதனை செய்துள்ளனர் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்கள். குறிப்பாக எந்த சிக்கல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக நாளொன்றுக்கு 50 பேர் வரையிலும், மாதம் ஒன்றுக்கு 1500 பேர் வரையும், ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் வரையிலும் பிரசவம் நடைபெறுகிறது.

ருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கின்றனர். நேற்று நடைபெற்ற பிரசவத்தில் 24 பெண் குழந்தைகளும், 40 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். இதில் ஒரு இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 34 அறுவை சிகிச்சை முறையிலும், மற்றவை சுகப்பிரசவமாகவும் நடைபெற்றது. தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக நலமுடன் உள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 தாய்மார்களும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் குழந்தையை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: