ஆட்டுப்பட்டி கோட்டைபுஞ்சை வனதுர்க்கை சித்தர் பீடத்தில் தசரா திருவிழா கோலாகலம் :திரளான பக்தர்கள் பங்கேற்பு

செய்யூர்: செய்யூர் அருகே, ஆட்டுப்பட்டிகோட்டை புஞ்சையில் உள்ள வனதுர்க்கை சித்தர் பீடத்தில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செய்யூர் வட்டம் ஆட்டுப்பட்டி கோட்டைபுஞ்சை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வன துர்க்கை சித்தர் பீடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதங்களில் தசரா மற்றும் திருத்தேர் வீதி உலா நடத்தப்படுது வழக்கம். இந்நிலையில், சித்தர் பீடத்தில் தசரா மற்றும் வனதுர்க்கை சித்தரின் திருத்தேர் வீதி உலா கோலாகலமாகவும், வெகு விமர்சையாகவும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் மங்கள வாத்தியத்துடன் துவங்கிய விழாவில், வனதுர்க்கை அம்மனுக்கும் சித்தருக்கும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு ராகு கால பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து சிவன், பார்வதி, விநாயகர், முருகன், அரக்கர்கள், மகிஷாசுரன், பல்வேறு அம்மன் மற்றும் தேவதைகளில் வேடமணிந்த பக்தர்கள் அக்கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, சித்தர் பீடத்தை அடைந்தனர். அங்கு, வேடமணிந்த தேவதைகள் திருநடனமாடினர். இதையடுத்து, வனதுர்க்கை சித்தர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அதேபோல், வனதுர்க்கை அம்மன் 18 கரங்களுடன் முத்து பல்லக்கில் பவனி வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வனதுர்க்கை தாசன் செய்தார்.

Related Stories: