அலங்காநல்லூர் பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி நிலங்களில்  200 ஹெக்டேருக்கு மேல் மக்காச்சோளம், பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்த இந்த மக்காச்சோளம் தற்போது கதிர் பிடிக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கி வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சாத்தியாறு அணை பாசன விவசாயிகள் மற்றும் மாநில பாஜ விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் ஜி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சவுடி அம்பலம், பாசன விவசாயிகள் துரைப்பாண்டி அழகர், பூஞ்சோலை மற்றும் கீழ சின்னம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் தர்மராஜா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டனர். பின் முத்துராமன் ஜி கூறுகையில், ‘இந்த ஆண்டு அதிக பரப்பளவில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. மத்திய-மாநில அரசு அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.

ஆனால் சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு பூச்சி கொல்லி மருந்துகள் கிடைக்காததால் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் பயிர்களை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றார்.

Related Stories: