சாராயம் காய்ச்ச உறிக்கப்படும் வெள்ள வேலமர பட்டைகள்: விவசாயிகள் கவலை

காங்கயம்: காங்கயம் பகுதியில் உள்ள காடுகளில் வெள்ள வேலமரத்தின் பட்டைகளை இரவு நேரத்தில் மர்ம கும்பல், சாராயம் காய்ச்ச உறித்து செல்வதால் மரங்கள் மடியும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம், நத்தக்காடையூர்,வெள்ளக்கோவில், ஊதியூர், உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களிலும், மாநில மற்றும் கிராம சாலை ஓரங்களிலும் அதிக அளவில் வெள்ள வேலமரங்கள் வளர்ந்து உள்ளன. விளைச்சல் நிலங்களில் உள்ள மரங்கள் ஆடுகளுக்கு நிழலாக இருக்க விவசாயிகள் வளர்க்கின்றனர். காங்கயம், ஊதியூர் மற்றும் பொத்திபாளையம் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய தோட்டங்களில் உள்ள வளர்ந்த வெள்ள வேலமரத்தின் பட்டைகளை சாராயம் காய்ச்ச தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து உறித்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வேல மரத்தின் பட்டைகளை உறித்து செல்வது தற்போது அதிகரித்துள்ளது. சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமே வேலமரப்பட்டையை எடுப்பார்கள் என்றும், வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த பட்டை பயன்படாது என்றும் கூறப்படுகிறது. வேலமரத்தின் பட்டை தான் சாராயத்தின் மூலப் பொருளாகும். இவ்வாறு பட்டைகள் உரிக்கப்படுவதால் நாளடைவில் மரம் மடிந்து விடுவதோடு, மழை பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், வெள்ள வேலமர பட்டைகள் இது போல் உரித்து எடுத்து செல்வது அதிகரித்துள்ளதால் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: