மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதுகுறித்த தமிழக அரசு மற்றும் அதிமுகவின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, தமிழக அரசு, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக முதலாவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியது.

இதை தொடர்ந்து, திமுக உட்பட மேற்கண்ட அனைத்து கட்சிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில், “இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது. மேலும் மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக்கூடாது என்று எந்த ஒரு தனிப்பட்ட விதிகளும் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.

இதை தவிர மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கல்வி நிலையங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் கிடையாது. அதனால் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டு தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசனை மேற்கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்.

மேலும், இதுகுறித்த புதிய சட்ட வரையறைகளை உருவாக்கவும் முன்வர வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அடுத்த 3 மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து இடஒதுக்கீடு தொடர்பாக உருவாக்கப்பட்ட ஆலோசனை குழுவில் தமிழக பிரதிநிதியாக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் வழங்கிய மேற்கண்ட உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோன்று மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவதாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. எங்களுக்கு கிடையாது. இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதனை நாங்கள் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம் என இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு வழங்க முடியாது. மேலும் இதுகுறித்து உருவாக்கப்பட்டுள்ள குழு அடுத்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்குவது குறித்துதான் ஆய்வு செய்து வருகிறது. மேலும் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக பிரதிநிதியும் இந்த ஆண்டு ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த வலியுறுத்தலையும் வைக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றதில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட  நீதிமன்றம் தீர்ப்பை தேதிக் குறிப்பிடாமல் கடந்த 15ம் தேதி ஒத்திவைத்ததோடு, வழக்கில் உள்ள அனைத்து மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து, ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணாவும், அதேபோன்று ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எதையும் பின்பற்றாமல் ஏனோதானோ என்று அவசர கதியில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதனால் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முழு விவரம் கொண்ட விரிவான அறிக்கையை அக்டோபர் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேவியட் மனுதாரர் தரப்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சனும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வ ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அதில்,” மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி பிரிவினருக்கு வழங்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பின் கோரிக்கையை நிராகரிப்பது மட்டுமில்லாமல், அவர்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இதில் மருத்துவ கலந்தாய்வு நடத்த சிறிது காலமே உள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் தனியாக நடப்பாண்டில் இடஒதுக்கீடு வழங்கினால் மற்ற மாநிலங்களில் பல்வேறு புதிய சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

மேலும் இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட குழு ஓபிசிக்கு அடுத்த ஆண்டில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் அதுவாகத்தான் உள்ளது. இடஒதுக்கீடு என்பது அரசு கொள்கை சார்ந்தது என்பதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டனர். மருத்துவ கலந்தாய்வு நடத்த சிறிது காலமே உள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் தனியாக நடப்பாண்டில் இடஒதுக்கீடு வழங்கினால் மற்ற மாநிலங்களில் பல்வேறு புதிய சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

* எத்தனை பேருக்கு பாதிப்பு?

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 251 இடங்களும், அதேபோன்று மருத்துவப் மேற்படிப்பில் 440 இடங்களும் நடப்பாண்டில் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் மேற்கண்ட உத்தரவு மாணவர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

Related Stories:

>