7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது..!! ஆளுநருக்கு கடிதம் எழுதிய பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்

சென்னை: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஓதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து அனைத்து கட்சி ஒப்புதலோடு அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே அது சட்டமாக நடைமுறைப் படுத்தப்படும் என்பதால் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு கையெழுத்திடாமல் தொடர்ந்து ஆளுநர் தாமதப் படுத்தி வருகிறார் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார்கள். 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்காமல் இந்தாண்டு மருத்துவ கலந்தாய்வை நடத்தமாட்டோம் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதோடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில அளவில் போராட்டம் நடத்தின. மேலும் பிரதான எதிர் கட்சியான திமுகவும் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தியது. மேலும் மத்திய பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ஆளுனர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அதை தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த அண்ணாமலை போன்றவர்கள் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினை அரசியல் நாடகம் என்றும், ஆளுநர் உரிய காலத்தில் ஒப்புதல் அளிப்பார் என்றும் கூறிவந்தனர்.

ஆனால் எதிப்புகள் அதிகமானதைத் தொடர்ந்து பாஜக தலைவர் எல்.முருகன் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் இந்த 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் எனவும் கூறினார். ஆனால் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜகவின் உண்மையான நிலை என்ன என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதான பாஜக அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் என்ற முறையில் கடிதம் எழுதினார். நந்தகுமாரை நீக்கி தமிழக கல்வி பிரிவு தலைவர் தங்க கணேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: