கொரோனா தளர்வுகளுக்கு பின் அதிரடி மாற்றம்: ‘மினிமம் பட்ஜெட்’ வீடுகளுக்கு திடீர் கிராக்கி: தங்கம் விலை உயர்வால் மாற்றி யோசிக்கும் மக்கள்

நெல்லை:  கொரோனா கால தடை தளர்வுகளுக்கு பின்னர் மினிமம் பட்ஜெட் வீடுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா அதிவேகமாக பரவத்தொடங்கியது. அப்போது முதல் இயல்பு வாழ்க்கை நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. மருத்துவம் தவிர அனைத்து பணிகளும் முடங்கியதால்  மக்களின் பொருளாதார நிலை கடுமையாக பாதிப்படைந்தது.  இதில் கட்டுமான தொழிலும் அடங்கும். தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவிலான மெகா  பட்ஜெட் கட்டுமான தொழில்கள், டெண்டர் பணிகள் போன்றவைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர்.

கொரோனா முடக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் பெரிய கட்டுமான தொழில்கள் அடியோடு முடங்கியது. அரசின் பெரிய அளவிலான ஒப்பந்த பணிகளும், தனியார் நிறுவனங்கள் கட்டி  வந்த மெகா கட்டிடப்பணிகளும் முடங்கின. அதே நேரத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த சில மாதங்களில் எதிர்பாராத அளவிற்கு தங்கம் விலை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடைகாலத்தில் வாகன போக்குவரத்து முடங்கிய போதும்  நாள் தவறாமல் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலையும் உயர்ந்தன.

ஏற்கனவே கொரோனாவுக்கு முன்னரே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது. பணப்புழக்கம் குறைந்ததால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், நிலங்கள் விற்பனையாகாமல் கிடந்தன. ரியல் எஸ்டேட்  தொழில் செய்பவர்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தும் பொருளாதார மந்த நிலையால் கட்டிய வீடுகளை யாரும் வாங்காமல் காற்று வாங்கியது. குறிப்பாக சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஐடி துறைகளின் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் விற்பனயாகாமல் இருந்தன. கொரோனா தொடங்குவதற்கு முன்னரும் தொடங்கிய பின்னரும்  சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சுமார் 40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக தடையில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழிலுக்கு தங்கம் போல் திடீர் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. அனைத்து வகை மக்களின் பொருளாதாரத்தையும்  கொரோனா நசுக்கியதால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டு வர மேலும் பல காலம் ஆகலாம் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலம் வாங்குவது, கட்டிய வீடுகளை (ரெடி பில்ட் ஹவுஸ்) வாங்குவது போன்றவைகளில்  ஓரளவு  வசதியுடையவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக மினிமம் பட்ஜெட் ரெடிமேடு வீடுகளை வாங்குவது சமீப நாட்களாக அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நெல்லையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் நடத்தும்  ஒருவர் கூறியதாவது:மக்களிடம் மினிமம் பட்ஜெட் வீடுகள் வாங்கும் ஆர்வம் மீண்டும் ஏற்பட்டிருப்பது உண்மையே. நெல்லை போன்ற தென்மாவட்டங்களில் ரூ.30 லட்சம் முதல் ரூ.45 லட்சம் பட்ஜெட்டில் ஏற்கனவே கட்டி முடித்த வீடுகளை வாங்குவது அல்லது  இந்த பட்ஜெட்டிற்குள் வீடு கட்டுவது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர்களுக்கு சற்று நம்பிக்கையை தந்துள்ளது.

அதே நேரத்தில் ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு மேல் கட்டப்பட்ட வீடுகள் அல்லது கட்டப்படும் வீடுகள் தேக்கம் அடைந்துள்ளன. அதிக பட்ஜெட் வீடுகள் மட்டுமின்றி வணிக வளாகம் போன்ற மெகா கட்டிடங்கள் கட்டும் தொழில் தொடர்ந்து  முடக்கத்தில் உள்ளது. அதில் முதலீடு செய்தவர்கள் கடந்த 6 மாத ஊரடங்கு முடக்கத்தால் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

குறைந்த பட்ஜெட் வீடுகளை வாங்கும் ஆர்வம் திடீரென அதிகரித்து இருப்பது தங்கத்தின் விலை உயர்வும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சரியாக கணிக்க முடியவில்லை. பாதுகாப்பு இல்லாத தங்கத்தில் அதிக முதலீடு செய்வதற்கு  பதில் நிரந்தர  வீடு வேண்டும். கூடுதல் வீடு இருந்தால் அதன் மூலம் வருவாய் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் குறைந்த பட்ஜெட் வீடுகளை சிலர் வாங்க முடிவு செய்திருக்கலாம். மேலும் கொரோனா முழு தடைகாலத்தில் பலர் வாடகை வீடுகளில் இருந்ததால் கிடைத்த கசப்பான அனுபவங்களால் எப்படியாவது வங்கி கடன் பெற்றாவது சிறிய வீடு நமக்கென கட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் வீடு கட்ட  ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது என்றார்.

மீளமுடியாதவர்களும்  உள்ளனர்

மினிமம் பட்ஜெட் வீடுகளை வங்கிக்கடன் அல்லது வேறு வழியில் கடன் பெற்று கட்டத்தொடங்கிய பலர் கொரோனா பாதிப்பால் வருவாய் குறைந்து தொடர்ந்து வீட்டை கட்ட முடியாத நிலையில் உள்ளவர்களும் உள்ளனர். இதுபோல் கட்டி முடித்து தாங்கள் பயன்படுத்தும் வீடுகளுக்கு வங்கி கடன் தவணை செலுத்துவதில் சிரமப்படுபவர்களும் உள்ளனர். எனவே வங்கிக்கடன் வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும் என இந்த தரப்பு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிலத்தின் மதிப்பு உயரும்

கடந்த சில வாரங்களாக மினிமம் பட்ஜெட் வீடுகளுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் இதன் எதிரொலியாக நிலத்தின் மதிப்பு உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர். வரும் ஜனவரிக்குள்  6 சதவீதம் வரை சிறிய அளவிலான பிளாட்டுகளின் மதிப்பு உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் கைடு லைன் மதிப்பும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories: