திருமாவளவன் மீது வழக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர். முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்): வழிவழியான எல்லா காலங்களுக்கும் ஒட்டுமொத்தப்  பெண்களையும் அடிமைப்படுத்தும் ‘மனுதர்மத்தின்’ சனாதனக் கருத்துக்களை, ஒரு நிகழ்வில் விளக்கிப் பேசிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  நிறுவனத் தலைவர் திருமாவளவன் மீது, சைபர் கிரைம் காவல்துறை 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது கருத்துரிமைப் பாதுகாப்பை  உடைத்தெறியும் சட்ட அத்துமீறலாகும்.

ராமகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்): திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை  மேற்கோள் காட்டி பேசியதற்காக அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, காவல்துறை திருமாவளவன் மீதான வழக்கை கைவிட  வேண்டும். வைகோ(மதிமுக பொதுச்செயலாளர் ): விசிக நிறுவன தலைவர் திருமாவளவன். பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். மனுநீதி  நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அவர் மீது பதிவு செய்த வழக்குகளை, காவல்துறை உடனடியாகத்  திரும்பப் பெற வேண்டும்.

ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): திருமாவளவன் மீதான 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பெண்களை  இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தும் நோக்கில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அவர்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது  ஏற்றுக்கொள்ள இயலாதது. எனவே, வழக்குகளை காவல்துறையினர் உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: