வீரர்களை அவமதித்து விட்டார் - ராகுல்

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  ஹிசுவாவில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: சீன ராணுவம் இந்திய பிராந்தியத்துக்குள் உண்மையில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் 1200 கிமீ நிலத்தை கைப்பற்றி உள்ளனர். சீன வீரர்கள் ஊடுருவியுள்ள நிலையில், ‘இந்திய பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை,’ என்று கூறி, இந்திய வீரர்களை மோடி அவமதிக்கிறார். பிரதமர் மோடி அவர்களே... நமது பிராந்தியத்துக்குள் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சீன ராணுவத்தை நீங்கள் எப்போது வெளியே தூக்கி வீசுவீர்கள்? கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி எதையுமே செய்யவில்லை.

தொழிலாளர்கள் முன் தலை வணங்குகிறேன் என்று அவர் கூறுகிறார். ஆனால், அவர்களுக்காக அவர் எதையும் செய்வதற்கு முன்வரவில்லை. பீகார் மக்களுக்கு மோடி எவ்வளவு வேலைவாய்ப்பை கொடுத்தார்? எப்போது கொடுத்தார்? என்பதை கூற வேண்டும். பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ் குமாரும் சேர்ந்து, ஏழை விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்களின் முதுகெலும்பை உடைத்து விட்டார்கள். ஏற்கனவே, ஒருவருக்கு தலா ரூ.15 லட்சம் தருவதாக கூறிய மோடி, இப்போது பீகார் மக்களுக்கு 19 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: