கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்: 160 கோடியில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 160 கோடியில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம் அமைப்பதற்கான வேலை ஜரூராக நடந்து வருகிறது.  சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ பயணிக்கிறது. இந்தச் சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன. புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாத்

தலமான மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை தான் பயன்படுத்துகின்றன.

இதனால், எப்போதும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்பதால், இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.  குறிப்பாக, திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை வரை சாலைகளில் இருபுறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டன. இதனால், ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை  கடக்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும். குறிப்பாக, பீக் அவர் காலக்கட்டமான காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் இப்பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும்நிலை தான் உள்ளது. இதனால், கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதை தொடர்ந்து, தற்போது, திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலை அகலப்படுத்தும் திட்டத்தை கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நில எடுப்பு பணிக்கு ₹778 கோடி ஒதுக்கீட்டின் கீழ் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளுக்கு கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களே முன்வந்து, அந்த சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடு, வணிக வளாகங்களை இடித்து அகற்றினர்.  கடந்த வாரம் கொட்டிவாக்கம் பகுதியில் கடைகள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து நேற்று பாலவாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக நீலாங்கரை பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில்  இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வரும் வாகனங்கள் திருவான்மியூர் வழியாகவே நுழைகின்றன. இதுதவிர கிண்டி, அடையாறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திருவான்மியூர் வழியாக புதுச்சேரிக்கும், கோவளம் மற்றும் மாமல்லபுரத்துக்கும் செல்கின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் திருவான்மியூர் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க திருவான்மியூர் சந்திப்பில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் லேட்டிஸ் பால சாலையில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் ஏற்கனவே, திருவான்மியூர் சந்திப்பில் துவங்கி, அங்குள்ள அம்மன் கோயில் வரை, 2 ஆயிரம் அடி நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, 120 அடி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, வருங்கால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, மேம்பாலத்தை, திருவான்மியூர் சந்திப்பில் துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம், 1.2 கி.மீ., நீளத்திலும், 2 புறங்களிலும், தலா, 37 அடி அகலத்திலும், மூன்று வழிச்சாலையாக அமைய உள்ளது. இதற்காக, 277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, 160 கோடி மதிப்பில், பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணி வரும் 2021ல் ஜனவரியில், தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: