7.5 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: கவர்னர் கூறியதை ஏன் வெளியில் சொல்லவில்லை? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: தமிழக கவர்னரை சந்தித்து பேசியது முழுவதையும் வெளியில் சொல்ல முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சர்கள் குழு தமிழக கவர்னரை சந்தித்து, 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தோம். தமிழக மாணவர்களின் நிலைமையை எடுத்துச் சொன்னோம். அதை கேட்டுவிட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும் என்றும் கூறினார். அதை நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. கவர்னரின் பரிசீலனையில் இருக்கும்போது, ஏன் காலஅவகாசம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நாங்கள் எப்படி கேட்க முடியும்? அழுத்தம் கொடுக்கிறோம். இந்த சட்டம் கொண்டு வந்தால் கிராமப்புறத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ பட்டப்படிப்பு படிக்க முடியும், அதனால் உங்களது கையெழுத்தும் தேவை என்று அழுத்தம் கொடுத்தோம். அப்போது, பரிசீலனையில் இருக்கிறது, கண்டிப்பாக அதற்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கூறினார். நான் வெளியில் வந்து, விரைவில் என்று கூறினேன்.

விரைவில் என்றால் என்ன அர்த்தம்? ஒரு வாரம், இரண்டு வாரம்கூட ஆகலாம். மூன்று வாரம்கூட ஆகலாம். கவர்னரிடம் பேசியதை வந்து எப்படி சொல்ல முடியும்? கவர்னர் என்கிற முறையில் எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். கவர்னர் கண்டிப்பாக தனது கடமையை தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இதுபற்றி தெரியும். திமுக போராட்டம் செய்வதை யாரும் தடுக்க முடியாது. எங்களது நோக்கம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். அதை வாங்கியே தீருவோம். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வரும்போதுதான் தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.

கூட்டணி கட்சி தலைவர் என்பது தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர் என்றாலும் அவங்க கட்சியை (பாமக) அவங்க டெவலப் பண்ணணும். அதனால் பாமக கட்சியினர் அவர்கள் சொந்த கருத்துகளை சொல்லத்தான் செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல முடியாது. அதற்கு நாங்கள் பதில் கொடுக்க வேண்டும் என்றால், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்துள்ளோம். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அதிமுக கூட்டணியில்தான் பாமக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது. அதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

குரூப்-4 பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எங்கே தப்பு நடக்குதோ அதை கண்டுபிடித்து தண்டனை கொடுப்போம். 100 பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 6 ஆயிரம் சென்டர் இருக்கிறது. ஒரு சென்டரில் தவறு நடந்ததற்காக தேர்வையே ரத்து செய்ய முடியாது. அதே நேரம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம். அதனால் படிப்படியாகத்தான் மது கடைகளை மூடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: