பனையஞ்சேரி ஊராட்சியில் குடிகாரர்களின் மதுக்கூடமாக மாறிய அரசு சேவை கட்டிடம்: கதவு, ஜன்னல்கள் உடைப்பு

ஊத்துக்கோட்டை: பனையஞ்சேரி ஊராட்சியில் கட்டி முடித்து திறக்கப்படாத சேவை மைய கட்டிடம் தற்போது குடிகாரர்களின் பார் ஆக மாறிவிட்டது. எனவே, அக்கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு சான்றுகள், திருமண நிதி உதவி, முதல் தலைமுறை பட்டதாரி சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, ஊத்துக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருவதால் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இக்கிராமத்திலேயே சேவை மைய கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு 13.12 லட்சத்தில் புதிய சேவை மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. எனினும், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, தற்போது அக்கட்டிடத்தின் கதவு, ஜன்னல்களை உடைத்து பல சமூக விரோதிகள் சூதாடுவதற்கும், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாகவும் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, புதிய சேவை மைய கட்டிடத்தை சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: