வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு.: மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை வைத்துக்கொள்ள அனுமதி

டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையான மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் வரத்து தமிழகத்துக்கு குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாதாரண நாட்களில் தினமும் 80 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. இது தற்போது 40 லாரிகள் அளவுக்கு தான் வந்து கொண்டிருக்கிறது.

வெங்காயம் வரத்து குறைவால் கடந்த மாதம் ரூ.25, ரூ.30 என்று விற்கப்பட்ட பல்லாரி வெங்காயம், தற்போது கிடுடுவென உயர்ந்து கிலோ ரூ.80, ரூ.90 என்று விற்பனையாகிறது. இதேபோல சின்ன வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது தற்போது இது ரூ.90 வரை விற்பனையாகிறது. இது மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. இதை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் வெங்காயத்தை கிலோ ரூ.130 வரை விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வெங்காயம் விலையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. வெங்காய மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் லீனா கூறியுள்ளார். மேலும் சில்லரை வியாபாரிகள் 2 டன் அளவிற்கும் இருப்பு வைத்து கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு வசம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளது கூறப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு  பகிர்ந்து அளித்து வருவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் தெரிவித்துள்ளது.

Related Stories: