கோவில்பட்டிக்கு சிப்பிப்பாறை வழியாக அரசு பஸ் இயக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி : சிப்பிபாறை வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், திருவேங்கிடம் போன்ற ஊர்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு சாத்தூர் வழியாக மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால், கோவில்பட்டியில் இருந்து சிப்பிபாறை, நடுவப்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் வழியாக ராஜபாளையம் வரை தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை, மாலை நேரங்களில் தனியார் பஸ் இயக்கப்படுவதில்லை.

வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கோவில்பட்டி பகுதியில் இருந்து ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் சாத்தூர், சிவகாசி வந்து வெம்பக்கோட்டைக்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

சிவகாசியில் இருந்து காலை, மாலை நேரங்களில் வெம்பக்கோட்டை, நடுவப்பட்டி, சிப்பிபாறை, இளையசந்தல் வழியாக கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்கினால் பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பெரிதும் பயனடைவர். எனவே அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களே இயக்கப்படவில்லை.

தனியார் பஸ் விருப்பமான நேரத்திற்கு வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே சிவகாசி, வெம்பக்கோட்டை, நடுவப்பட்டி, சிப்பிபாறை, இளையசந்தல் வழியாக காலை, மாலை கோவில்பட்டிக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: