நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில் மின்பாதை அமைக்கும் பணி மும்முரம்-வர்த்தகர்கள் பயணிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி : நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே மின்பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வழியாக பட்டுக் கோட்டை வரை 55 கிமீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க அப்போதைய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த திமுக எம்பி டிஆர் பாலு எடுத்த தொடர் முயற்சியால் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2010 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தார்.

அதில் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான14 கிமீ தூரத்திற்கு ரூ.79 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்க பட்டு அதில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி, ஜோத்பூர் ஊர்களுக்கு இடையே விரைவு ரயில்களும், மயிலாடுதுறை, மானாமதுரை, திருச்சி இடையே பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி-தஞ்சை- திரூவாரூர்- காரைக்கால் இடையே ரயில் பாதை ரூ.227.26 கோடியில் மின்மயமாக்கப்பட்டு மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையின் கிளைப்பாதையாக இருக்கும் நீடாமங்கலம்- மன்னார்குடி ரயில்பாதை மின்மயமாக்கப்படாமல் விடுபட்டு இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னார்குடி ரயில் நிலையம் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளும் நிலையமாக தரம் உயர்த்தியது. சரக்கு போக்குவரத்தும் துவங்க உள்ளதால் மன்னார்குடி- நீடாமங்கலம் ரயில்பாதை மின் மயமாக்கும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.மின்பாதை அமைக்கும் பணியை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ஆர்வி.என்எல் என அழைக்கப் படும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டு 2020 டிசம்பர் இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடைய இருக்கிறது.

மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் செல்லும் பகல் கீ கோத்தி விரைவு ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி கடந்த சில தினங்களுக்கு முன் வாரியம் உத்தரவிட்டது. இதனால் பகல் கீ கோத்தி அதி விரைவு ரயில் மற்றும் மன்னை, செம்மொழி விரைவு ரயில்களும் இந்த பணிகள் முடிவடைந்த உடன் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட உள்ளன.

மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்குவதால் பயண நேரம் குறையும். இதனால் சென்னை, கோவை, ஜோத்பூர் செல்ல பயண நேரம் குறையும். வரும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கும் ரயில்வே அட்டவணையில் இந்த விவரங்கள் தெரிய வரும். மேலும் மன்னார்குடி ரயில் நிலைய நுழைவாயில் அருகே ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரயில் பயணி கண்டிதம்பேட்டை தாய் செந்தில் கூறுகையில், சரக்கு முனையம், மின்மயம், நவீன கழிப்பிடம் என அடுத்தடுத்து மன்னார்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ரயில்வே மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. கொரானாவால் பயண போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தை ரயில்வே வளர்ச்சி பணிகளுக்கு ரயில் வேத்துறை செலவிடுவது பாராட்டுகுறியது. மேலும் இதற்கு உறுதுணையாக நிற்கும் மன்னை தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மன்னார்குடி ரயில் நிலைய வளர்ச்சிக்காக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற தினகரன் நாளிதழ் மற்றும் ரயில்நிலைய அதிகாரி மனோகரன் ஆகியோருக்கும் ரயில் பயணிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

இதுகுறித்து இளம் வளர் தொழில் முனைவோர் நெடுவை முருகானந்தம் கூறுகையில்,மின்சார என்ஜின்கள் பயண நேரத்தை குறைக்கும். இது வர்த்தகர்கள் விரைவாக சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல உதவியாக இருக்கும். சரக்கு கொண்டு செல்லும் நேரமும் குறையும். ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்துவது நகர வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

ரயில் நிலைய யார்டு மன்னார்டுடி - திருவாரூர் சாலை ஐவர் சமாதி வரை நீட்டி க்கும் பணியும் நடந்து முடிந்து இருக்கிறது. இதனால் கூடுதல் பெட்டிகள் மன்னார்குடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் இணைக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக முன்பதிவு பர்த்கள் கிடைக்கும். ரயில்வே பணிகள் வரவேற்புக்கு உரியது என்று கூறினார்.

Related Stories: