7.5% இடஒதுக்கீடு வழங்க 4 வாரம் அவகாசம் கேட்ட கவர்னர் ஆளுநர் மாளிகை முன்பு 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: உண்மையை மறைத்த அமைச்சர்கள் குழு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:  ஆளுநர் மாளிகை முன்பு 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5% ் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக 15.9.2020 அன்று நிறைவேற்றி,  தமிழக ஆளுநருக்கு அனுப்பியும், அவர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை. ஒரு மாதத்திற்கும் மேல் இந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால் - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீட்  தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க  முடியாத நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்கள்.

 இந்நிலையில் திமுக சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதி, இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுநர் , “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் - குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும்.

 அதே கடிதத்தில், “மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன்” என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் ஆளுநரைச் சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் குழு, “கால அவகாசம் வேண்டும்” என்று ஆளுநர் சொன்னதையே தமிழக மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துங்கள். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருகிறேன்” என்று ஆளுநர் தமிழக அமைச்சர்களிடம் சொன்னதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது.

சமூக நீதியைச் சீர்குலைக்கும் அப்படியொரு கருத்து, அந்த சந்திப்பில் முன் வைக்கப்பட்டதா என்பதை அமைச்சர்கள் குழு உடனடியாக  தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.  அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநரை எதிர்த்து  போராடுவதற்கு பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை. 16.10.2020 அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. கல்லூரிகளில் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான “கட் ஆப்” தேதியை மத்திய அரசே நிர்ணயிப்பதால் - ஆளுநர் கோரும் ஒரு மாத கால அவகாசம் வரை மாநில அரசால் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் - மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்காமல் இருக்க முடியுமா என்பது பெருத்த  ஐயப்பாட்டுக்குரிய கேள்வியாக இருக்கிறது.

 எனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் - தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத்  துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் 24-10-2020 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திமுக சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Related Stories: