தென்காசி மாவட்டத்தில் அரசுப் பணிகளுக்கு அனுமதி வழங்காமல் பணிகள் நடப்பது எப்படி?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: தென்காசி மாவட்டத்தில் அரசுப் பணிகளுக்கு அனுமதி வழங்காமல் பணிகள் நடப்பது எப்படி என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தென்காசியை சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்காசி மாவட்டத்துக்கான உள்கட்டமைப்பு கட்டுமான பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி, மற்றும் பாலங்கள் போன்ற வேலைகளுக்கு பல்வேறு அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் விடும் பணி நடைபெற்றது. முறைப்படி கடந்த மே 2-ம் தேதி 13 வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இதில் 9 பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்படவில்லை. இந்த பணி ஆணை பெறாமல் ஒரு தனியார் நிறுவனம் இந்த வேலைகளை எடுத்து செய்து வருகிறது. 4 பணிகளுக்கு பணி ஆணை பெறப்படவில்லை. ஆனால் தனியார் நிறுவனம் அந்த பணிகளை எடுத்து 75% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த 4 பணிகளுக்கும் செப்டம்பர் 29-ம் தேதியில் புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படாமலேயே புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் முறையிட்டோம், ஆனால் இதில் முறைகேடுகளும் நடைபெறுகிறது. ஆகவே புதிதாக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரி மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் அப்துல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பணியாணை பெறாமல் தனியார் நிறுவனம் பணிகளை செய்து வருவதாக புடைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அரசுப் பணிகளுக்கு அனுமதி வழங்காமல் பணிகள் நடப்பது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: