மாவட்டத்தில் திருடு போன 110 செல்போன்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு மற்றும் தொலைந்த 110 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், இந்த மாவட்டத்தில் தொலைந்தது, காணாமல் போனது, வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்கள் தொடர்பாக 640 வழக்குகள் உள்ளன. இதுவரையில் 110 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த செல்போன்களின் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். மேலும், இந்த செல்போன்கள் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் மட்டும் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செல்போன்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உபயோகப்படுத்திய செல்போன்களை கடைகளில் வாங்கும் போது, அதற்கான விலை பட்டியல் போன்ற விவரங்களை பார்த்து பொதுமக்கள் வாங்கவும் அறிவுறுத்தினார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே இந்த வழக்குகளில் காணாமல் போன வாகனங்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தனியார் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: