5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 65 வயது மெக்கானிக் போக்சோவில் கைது: தலைமை ஆசிரியையும் சிக்கினார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 65 வயது மெக்கானிக், உடந்தையாக இருந்த அவரது மனைவியான அரசு பள்ளி தலைமையாசிரியை ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே வசித்து வருபவர் தங்கவேல் (65). அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அய்யம்மாள் (55). அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை.  தங்கவேல் தினமும் மனைவியை பைக்கில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது வழக்கம்.

மதிய நேரத்தில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில், அதே பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவியை அழைத்து அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியையான அய்யம்மாளிடம் மாணவி தெரிவித்தபோது, அவரை அடித்ததோடு வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்த மாணவி பெற்றோரிடம் வேறு காரணம் கூறி வேறு பள்ளிக்கு மாறியதாக  தெரிகிறது. இந்நிலையில், கடந்த வாரம் தங்கவேல் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று இதுபற்றி விசாரித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி அவரால் தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பல நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்த தங்கவேல், கணவரை தடுக்காமல் உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை அய்யம்மாள் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் தங்கவேலை அவினாசி சிறையிலும், அய்யம்மாளை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Related Stories: