நீட் தேர்வுக்கு எனது எதிர்ப்பும் ஆதரவும் இல்லை: அமைச்சர் உதயகுமார் திடீர் சர்ச்சை

மதுரை: நீட் தேர்வுக்கு எனது எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை என அமைச்சர் உதயகுமார் பேசினார். மதுரையில் அதிமுக பேரவை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ - மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு, அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய் ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர். பின் விழாவில் உதயகுமார் பேசும்போது, ‘‘தமிழக அரசு பள்ளிகளில் படித்தால் நீட் தேர்வு எழுத முடியுமா, முடியாதா என்கிற விவாதம் நடைபெறுகிறது, நீட் தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தோம். முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசுப்பள்ளி மாணவர் நிரூபித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தை சரியாக கையாள வேண்டும். போட்டித்தேர்வு என்பது மாணவரின் தகுதியை வெளியே கொண்டு வருவதற்கு உதவும். மத்திய அரசு நேரம், காலம், அவகாசம் கொடுத்தால் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள். நீட் தேர்வு விலக்குக்காக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீட் தேர்வுக்கு எனது ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை’’ என்றார்.

Related Stories: