சின்னாளபட்டி கோயில்களில் துர்க்கை, நான்முக முருகனுக்கு சிறப்பு வழிபாடு

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் உள்ள கோயில்களில் துர்க்கையம்மன், நான்முக முருகருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கீழக்கோட்டை துர்க்கையம்மன் கோயில் உள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பெண் பக்தர்கள் அம்மன் துதி பாட்டு மற்றும் அம்மனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபாட்டில் ஈடுபட்டனர். கையில் குச்சியுடன், குறி சொல்லும் ஜக்கம்மாள் தேவி  வேடத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். செம்பால் அபிஷேகம் சின்னாளபட்டி கடை வீதியில் உள்ள சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வடக்கு பகுதியில் 4 முகங்களுடன் கூடிய நான்முக முருகருக்கு (சதுர்முக முருகன்) தனி சன்னதி உள்ளது. திருமணத் தடை, செவ்வாய் தோஷம் நீங்க, கல்வி அறிவு பெற செவ்வாய்கிழமைகளில் சதுர் முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த “செம்பால் அபிஷேகம்” செய்வது வழக்கம்.

நேற்று சதுர்த்தியை முன்னிட்டு மூலவரான சிவசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகமும், நான்முக முருகருக்கு சகஸ்கர நாம அர்ச்சனையுடன் பாலாபிஷேகம் நடந்தது. முககவசம் அணிந்த வரும் பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

Related Stories: