அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசை கலந்தாலோசிக்காமலும் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நேற்று ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜிவ்காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம், எல்.சுந்தரராஜன், ஜி.செல்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் வலியுறுத்துவதெல்லாம் அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கக்கூடாது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் கடிதம் எழுதிய துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழக கவர்னர் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகின்றார். தமிழக அரசு இதில் வேடிக்கை பார்க்க கூடாது. ஒப்புதல் தராவிட்டால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும்.

Related Stories: