சேலம் அரசு மருத்துவமனை ஐ.சி.யூ வார்டில் ஓடி விளையாடும் எலிகள்: வீடியோ வைரலானதால் ஊழியர்கள் வேட்டை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் நோயாளிகளுக்கு இடையே எலிகள் ஓடி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து ஊழியர்கள் எலிப்பொறி வைத்து 50க்கும் மேற்பட்ட எலிகளை பிடித்தனர். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டித்தில் ஒவ்வொரு துறைக்கான தீவிர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் ஆக்ஸிஜன் வசதி தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நோயாளிகளுக்கிடையே ஓடி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் ஆக்ஸிஜன் பைப் லைன் மீதும் எலிகள் ஓடுகின்றன. சிகிச்சை பெறும் நோயாளிகள், உணவுகளை எலி சாப்பிட்டது தெரியாமல் சாப்பிட்டும் வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் பைப் லைன் ஒயர்களை எலி கடித்து விட்டால், நோயாளிகள் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 40 சிறிய, 2 பெரிய எலிப்பொறிகள் வார்டுகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட எலிகளை பிடித்தனர்.

Related Stories: