பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: பெண் அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கமல்நாத் பேசியது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது ராகுலின் கருத்து. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என கமல்நாத் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், பாஜ வேட்பாளரும் மாநில அமைச்சருமான இமர்தி தேவியை கொச்சைப்படுத்தினார். ‘‘காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சாதாரணமானவர். அவரை எதிர்த்து ‘அயிட்டம்’ போட்டியிடுகிறார்’’ என கமல்நாத் பேசியது கடும் சர்ச்சையானது.

இதற்கு மபி முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு கமல்நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து பிரசாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக விளக்கமான அறிக்கை தர மாநில தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கமல்நாத்தை கட்சியின் அனைத்து பதவியிலிருந்து நீக்க வேண்டுமென முதல்வர் சிவராஜ் சவுகான், இமர்தி தேவி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கமல்நாத் விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘‘கமல்நாத் எனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பயன்படுத்திய வார்த்தை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. அதை நான் ஒருபோதும் வரவேற்க மாட்டேன். இது துரதிஷ்டவசமானது’’ என வருத்தம் தெரிவித்தார். இது குறித்து கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இது ராகுலின் கருத்து. எனது பேச்சை பற்றி ஏற்கனவே நான் விளக்கமளித்து விட்டேன்.

நான் யாரையும் அவமானப்படுத்தவில்லை. அப்புறம் ஏன் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் அவமதித்ததாக யாரேனும் கருதினால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தை பாஜ தவறாக பயன்படுத்துகிறது. தோற்று விடுவோம் என்பதை அறிந்த அவர்கள், உண்மையான பிரச்னைகளை மறைக்க மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். சவுகான் தலைமையிலான 15 ஆண்டுகால பாஜ ஆட்சியில் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மபி முதலிடத்தில் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்?’’ என்றார். கமல்நாத்தின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ அமைச்சர் அடுத்த சர்ச்சை

கமல்நாத் சர்ச்சை ஓயாத நிலையில், பாஜ அமைச்சர் பிசாஹூலால் சிங் அனுப்பூர் தொகுதி பிரசாரத்தில் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் சிங் தனது வேட்புமனுவில் ஏன் தன் முதல் மனைவி பெயரை குறிப்பிடாமல், கள்ளக்காதலி பெயரை குறிப்பிட்டுள்ளார். முதல் மனைவியை மறைத்து கள்ளக்காதலியை முன்னிலைப்படுத்துகிறார்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘எனக்கு திருமணமாகி 15 ஆண்டாகிறது. 14 வயதில் மகள் உள்ளார். பிசாஹூலால் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். அவரது பேச்சு பாஜவின் வேட்பாளரின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது’’ என்றார்.

Related Stories: