எக்கு கோட்டை போல் செயல்படும் திமுக தலைமையிலான கூட்டணி பற்றி பேச அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: எக்கு கோட்டை போல் செயல்படும் திமுக தலைமையிலான கூட்டணி பற்றி பேச அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அதிமுக- பாஜ கூட்டணியைப் போல சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜ இருக்கிறதா, இல்லையா என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2021 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக பாஜ தலைமையோடு அதிமுக தலைமை கலந்து பேசியிருக்கிறதா, அதிமுக கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பாஜவுக்கு இருக்க முடியாது.

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பெயரை ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா? இந்நிலையில் எக்கு கோட்டை போல உறுதியாக செயல்பட்டு வருகிற திமுக தலைமையிலான கூட்டணியை பற்றி பேச ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்த தகுதியும் கிடையாது. அதிமுக கூட்டணியில் பாஜவை சேர்த்தால் கடந்த மக்களவை தேர்தலை போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு இருக்கிறது. தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜ இருப்பதற்கு காரணம் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான்.

எனவே, அதிமுக கூட்டணியில் இவ்வளவு குழப்பங்களை வைத்துக் கொண்டு தமிழக மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்களது உரிமைகளை பாதுகாக்கிற கேடயமாகவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுகிற வாளாகவும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி விளங்குகிறது. எனவே, எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: