தற்கொலை மிரட்டலை அடுத்து பாழடைந்த கிணற்றை மூடும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஒரு குடும்பத்தினர் விடுத்த மிரட்டலை அடுத்து ஆபத்தை விளைவிக்கும் பாழடைந்த கிணற்றை அவசரம் அவசரமாக மூடும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர் 15வது தெருவைச் சேர்ந்தவர் வரதன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பின்புறம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு ஆழமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 50 ஆண்டுகளை கடந்த பழமையான கிணறு என்பதால் பயன்பாட்டிற்கு உதவாத இக்கிணற்றின் பல பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுந்து வந்தது.

கிணறு சரிந்து விழுந்து வருவதால் கிணற்றை ஒட்டியுள்ள வரதனின் வீடு கிணற்றில் இடிந்து விழக் கூடிய அபாய நிலை இருந்து வந்தது. இதனால் வரதனின் குடும்பத்தினர் அச்சத்திலேயே வாழ்ந்து வந்தனர்.

இந்த பாழடைந்த பழமையான கிணற்றை மூட வேண்டும் என்று வரதன் குடும்பத்தினர் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முதல் தலைமை செயலாளர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வரதன் வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து அந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தது. இதனால் அச்சமடைந்த வரதன் குடும்பத்தினர் சுற்று சுவர் இடிந்து விழுந்ததையடுத்து வீடும் இடிந்து கிணற்றில் விழும் அபாய நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த கிணற்றை மண் போட்டு மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகு தான் பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த கிணற்றை மூடும் பணியை துவக்கியுள்ளனர். எனினும் இந்தப்பணியை பாதியில் நிறுத்தி விடாமல் முழுவதுமாக இந்தக் கிணற்றை மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக இந்த கிணற்றை மண் போட்டு மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: