துணி வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைகளில் நூதனகொள்ளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள ஜவுளிக்கடைகளில் நூதன முறையில் கொள்ளையடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் புதுப்புது கடைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் மக்கள் தொகை நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள், அலுவலகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை கும்பல் குடும்பம், குடும்பமாக தனித்தனியாக பிரிந்து  நூதன கொள்ளையில் ஈடுபடுவதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்படி பொன்னேரி டி.எஸ்.பி கல்பனாதத் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ மாரிமுத்து, தலைமை காவலர் மோகன், தனிப்பிரிவு காவலர் ராமதாஸ், கோகுல் உள்ளிட்ட தனிப்படை போலீசார் திருடுபோன கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் சாலைகளில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஒரு குடும்பமே இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இதுதொடர்பாக, சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த வரலட்சுமி(40), இவரது மகன் சுரேஷ்(25), சுரேஷின் மனைவி ஜெனிபர்(21) மற்றும் சென்னை காக்காதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷின் மாமியார்  தேன்மொழி(40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்  தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்குவதுபோல் கடைக்கு சென்று கடைக்காரர்களிடம் பொருட்களை கேட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்பி  கடைகளில் உள்ள திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: