வங்கி கணக்கு, லாக்கர்கள் முடக்கம்; ரூ100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்: வெளிநாட்டு மதுபானங்களுடன் சொகுசு வாழ்க்கை அம்பலம்

வேலூர்: மாசுகட்டுப்பாட்டு வாரிய முதன்மை பொறியாளரிடம் ரூ3.25 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதலை தொடர்ந்து அவரது  மனைவி வங்கி கணக்கு, லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு ₹100 கோடியை தாண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வேலூர் மண்டல மாசு கட்டுப்பாடு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி ரூ3.25 ேகாடி ரொக்கம், 3.5 கிலோ தங்கம், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது: பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாதமும் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது வழக்கம்.

அப்போது அவரை சந்திக்க வரும் அதிகாரிகளிடம், அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், அவற்றின் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்பது உள்ளிட்ட பட்டியலை திரட்டி உள்ளார். அதன் அடிப்படையில் வசூல் செய்துள்ளார். அவரது காட்பாடி வீட்டில் 2 உள்நாட்டு உயர்ரக மதுபானங்கள் இருந்தது. ராணிப்பேட்டை வீட்டில் அவரது படுக்கை அறையில் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்கள் இருந்தது. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். பன்னீர் செல்வத்தின் ெசாத்துக்கள் தற்போதைய சந்தை மதிப்பில் ₹100 கோடியை தாண்டும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக அவரது மனைவியின் வங்கி கணக்கு மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வங்கி கணக்குகள் முடக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீபாவளி வசூல் முன்கூட்டியே ஆரம்பம்

அடுத்த மாதம் தீபாவளி வருகிறது. அப்போது அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வசூலித்தால், விஜிலென்ஸ் போலீசார் நோட்டமிடுவார்கள் என்பதால், முன்கூட்டியே பன்னீர் செல்வம் லஞ்சம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அடுத்த கூட்டத்துக்கு வரும்போது வசூல் பணத்தை கொண்டு வந்து இடைத்தர்களிடம் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கறாராக தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் எந்த நேரத்திலும் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்பதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: