தமிழக-கர்நாடக எல்லையில் தொடரும் துயரம் யானைகளின் தாக்குதலால் மிரண்டு நிற்கும் கிருஷ்ணகிரி மலை கிராமங்கள்: உயிர்பலிகளால் பெரும் பீதி; பயிர்கள் நாசத்தால் வேதனை

கிருஷ்ணகிரி: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம். வனப்பகுதியைச் சுற்றி உள்ள இந்த மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாகும். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி  என்று முக்கிய நகரங்களை சுற்றி வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அந்த வனப்பகுதியில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள், மான்கள், முயல்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. அதில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் மட்டும் சுமார் 200 யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி, அய்யூர், நொகனூர், மரக்கட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ளன.

இதைத் தவிர ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் காட்டிலும் சுமார் 30 யானைகள் உள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து சுமார் 100 யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன.

இதில் விவசாயிகளின், நெல், ராகி, தக்காளி, பீன்ஸ், கேரட், கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் நாசமாகிறது. ஒவ்வொரு முறையும் யானைகள் வந்து செல்லும் இந்த 4 மாத காலங்களில் சுமார் 6 பேர் யானை தாக்கி இறப்பதும், ஓரிரு யானைகள் இறப்பதும் தொடர்ந்து வருகின்றன. ராகி என்பது யானைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். பயிரிடப்பட்டுள்ள ராகியில் பால் வந்தால் அதன் வாசனை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் யானை அதை நுகர்ந்து கண்டுபிடித்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

யானையை பொறுத்தவரையில் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வந்தாலும், அந்த யானை வந்த பாதையை சரியாக ஞாபகம் வைத்து திரும்ப செல்லும் குணமுடையதாகும். மேலும் நாள்தோறும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க கூடியது. மேடான பகுதிகளில் வெகு எளிதாக ஏறக்கூடிய இந்த யானைகள், பள்ளமான பகுதிகளில் இறங்க தயங்கும் குணமுடையதாகும். இந்த யானைகள் கிராமத்திற்குள் வராமல் இருப்பதற்காக வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனாலும் விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த அகழிகள் உள்ள பகுதிகளில் மண்ணை போட்டு நிரப்பி வருவதால் யானைகள் அந்த வழியாக வெகு சுலபமாக வந்து விடுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த வனப்பகுதியில் உள்ள யானைகளால் ஏற்படும் பயிர் சேதம், உயிர் சேதத்தை விட, கர்நாடகாவில் இருந்து 4 மாதங்கள் வந்து முகாமிடும் யானைகளாலேயே சேதம் அதிகமாகிறது.

கர்நாடகா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், அக்டோபர் மாதம் வரும் நிலையில் அதை திரும்ப அந்த வனப்பகுதிக்கே கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் அனுப்புகிறார்கள். ஆனால் கர்நாடக வனத்துறையினரோ அவர்கள் பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, திரும்ப வரும் யானைகளை ரப்பர் குண்டு மூலமாக சுட்டு மீண்டும் தமிழக வனப்பகுதிக்கே அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகள் அருகில் உள்ள ஊடேதுர்க்கம், சானமாவு மற்றும் பிற வனப்பகுதிக்குள் வராமல் இருக்க போதுமான அகழிகள் வெட்ட வேண்டும். மேலும் யானைகளுக்கு வனப்பகுதிக்குள் தேவையான தண்ணீர், உணவுகள் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்கள், உயிர் சேதங்கள் குறையும். அதே போல யானைகள் இறப்பும் கட்டுப்படுத்தப்படும் என்பது மூத்தவிவசாயிகள் மற்றும் வனஉயிரியல் ஆர்வலர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. யானையை பொறுத்தவரையில் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வந்தாலும், அந்த யானை வந்த பாதையை சரியாக ஞாபகம் வைத்து திரும்ப செல்லும் குணமுடையதாகும். மேலும் நாள்தோறும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க கூடியது.

* முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை

தளிபிரகாஷ் எம்எல்ஏ கூறுகையில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதிக்குள் கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து 200யானைகள் வரை வந்துள்ளன. மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியை ஒட்டி, சோலார் மின்வேலிகளோடு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய ஆட்கள் இல்லாதால் யானைகள் தளி வனப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றது. எனவே நுழைவு வாயில்களில் ஆட்களை நியமித்து யானைகள் வருவதை தடுக்க வேண்டும், ஜவளகிரியை போல் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலும் ரோப்வயர் அமைத்து சூரிய மின்வேலி அமைக்க சட்டசபையில் கவன ஈப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதன்பேரில் 24 கிலோ மீட்டர் சூரிய மின்வேலி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தும் இதுவரை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,’’ என்றார்.

* வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு

விவசாயி கேசவன் கூறுகையில், ‘‘தேன்கனிக்கோட்டை பகுதியில் தாவரகரை, ஒசட்டி, கெண்டிகானப்பள்ளி, நொகனூர், மரகட்டா, அந்தேவனப்பள்ளி, மாரசந்திரம், லக்கசந்திரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் யானைகள் கூட்டம் பயிர் சேதம் செய்கின்றது. இது ஆண்டுதோரும் தொடர்கதையாக உள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் தனி குழு அமைத்து பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

* ஏக்கருக்கு ரூ.1லட்சம் நிவாரணம் வேண்டும்

விவசாயிகள் சங்க தலைவர் தாசப்பா கூறுகையில், ‘‘தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் ஆண்டு முழுவதும் யானைகளால் உயிர் சேதம், பயிர் சேதம் ஏற்படுகிறது. வாழை,தக்காளி, பீன்ஸ்,முட்டைகோஸ் பேன்ற தோட்டப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், ராகி,அவரை, துவரை பயிருக்கு ஏக்கருக்கு ₹20ஆயிரம் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் நேரடி விசாரணை மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றார்.

* யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை

தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகர் சுகுமார் கூறுகையில் ‘‘தேன்கனிக்கோட்டை வனச்சரகம் கோலட்டி வனப்பகுதியிலிருந்து பேராளம் மல்லேஏரி வரை ஐந்து கிலோ மீட்டர் ரோப் வயருடன் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டள்ளது. கோலட்டியிலிருந்து சாத்தனக்கல் வரை 24கிலோமீட்டர் ரோப் ரேப்வயர் அமைத்து சூரிய மின்வேலி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்தஉடன் பணிகள் துவக்கப்டும். கர்நாடக வனப்பகுதியிலிருந்து தற்போது யானைகள் தளி வனப்பகுதிக்குள் வர துவங்கியுள்ளன. யானைகள் விளை நிலங்களில் புகுவதை தடுப்பதற்கும், அடர்ந்த வனப்குதிக்குள் விரட்டவும் மாவட்ட வனஅலுவலர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: