காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணிகள் வெளிப்படையாக நடக்கவில்லை: இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடக்கும் நகை சரிபார்ப்புப் பணிகள், வெளிப்படை தன்மை இல்லாமல் நடப்பதாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடக்கும் நகை சரிபார்ப்பு பணிகள், வெளிப்படைத் தன்மை இன்றி நடப்பதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து, பக்தர் டில்லிபாபு என்பவர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயிலுக்கு பலகோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய ஆபரணங்கள், தொன்மையான வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி வாகனங்கள், பல்லக்கு மற்றும் 9 உண்டியல்கள் உள்ளன.

கோயில் சொத்து பட்டியலில் தொன்மையான கல்லிழைத்த தங்க வேல், வெள்ளி சுப்ரமணியர் கிரீடம், தங்க கல்லிழைத்த பலகை, தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம், சுமார் 11 கிலோ எடையுள்ள வெள்ளி பல்லக்கு ஆகியவை உள்ளன.குறிப்பாக, இதில் உள்ள வெள்ளி பல்லக்கில் இருந்து வெள்ளி தகடுகள், நகைகளை உடைத்து அதில் இருந்து வைரம், வைடூரியம், மாணிக்கத்திலான விலை உயர்ந்த கற்களை எடுத்து, அதற்கு பதிலாக போலி கற்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்தவேளையில், ஏகாம்பரநாதர் கோயிலில் நகைகள், நகை சரிபார்ப்பு அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின்போது தொடர் வீடியோ பதிவு செய்யவில்லை. பக்தர்கள், மனுதாரர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் என யாரையும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து முறையாக அறிவிப்பும் செய்யவில்லை.எனவே இந்த ஆய்வு, முறையாக வெளிப்படைத் தன்மை இல்லாமல், குற்றங்களை மறைக்கும் நோக்கத்தோடு நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த ஆய்வு வெளிப்படையாக நடக்கவும், நகை கொட்டடியில் உள்ள திருமேனிகள் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: